Monday, November 29, 2010

சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.

1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. . ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ‘மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக் குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.
இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக” (International Human Rights Day) கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்” என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும், செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.
இந் நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டுக்கான தொனிப்பொருள் “எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்’ (dignity and justice for all of us) என்பதாகும்.
1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், ‘எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்.” என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

No comments:

Post a Comment