Monday, November 29, 2010

சிறுவர் உரிமைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்; உரிமைகள் பற்றிய சமவாயம் 1989ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சமவாயம் சர்வதேசவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக விளங்குவதுடன் எல்லாப் பிள்ளைகளுக்குமுரிய உரிமைகளை வரையறுத்துள்ளது. இதில் சிறுவர்கள் சிறப்பான மதிப்புக்குரியவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்குரிய நன்மைகள், அவர்கள் பெறவேண்டிய பாதுகாப்பு போன்றவற்றினை வரைமுறைப்படுத்துகிறது. இச்சமவாயம் 54 உறுப்புரைகளினைக் கொண்டுள்ளது. அதில் 42 உறுப்புரைகளின் சாரம்சம் பின்வறுமாறு:

உறுப்புரை 1 – சிறுவர் பற்றிய வரைவிலக்கணம்

18 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரும் சிறுவர், சிறுமியர் ஆகக் கணிக்கப்படுவர். இச் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா உரிமைகளையும் ஒவ்வொரு பிள்ளையும் அனுபவித்தல் வேண்டும்.

உறுப்புரை 2 – பாகுபாடு காட்டாமை

எல்லாப் பிள்ளைகளும் அவர்களின் வயது, பால், ஊனம், நிறம், சாதி, மொழி, அல்லது மதம் எவ்வாறிருப்பினும் இவ் உரிமைகள் எல்லாச் சிறுவர் சிறுமியருக்கும் உரியன. சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்தும் பாதுகாப்பதும், அவர்களின் உரிமைகளை பரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும்.

உறுப்புரை 3- சிறுவரின் சிறந்த நலன்கள்

சிறுவர்கள் தொடர்பான சகல செயற்பாடுகளும், முடிவுகளும் அவர்களின் சிறந்த நலன்களை கருத்தில் கொண்டமைதல் வேண்டும்.

உறுப்புரை 4 – சமவாயத்தை நடைமுறைப்படுத்தல்

சமவாயத்தில் அடங்கியுள்ள உரிமைகளை நிதர்சனமாக்குவதற்கு அரசாங்கம் தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

உறுப்புரை 5 – பெற்றோரின் வழிநடத்தலும் குழந்தையின் வளர்ச்சியும்

குழந்தை அதன் பரிணாம வளர்ச்சிக்கு இசைவான நெறிமுறைகளை புகட்டுவதில் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் உள்ள உரிமைகளையும் பொறுப்புக்களையும் அரசாங்கம் மதித்தல் வேண்டும்;.

உறுப்புரை 6 – உய்வும் மேம்பாடும்

ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழும் உரிமை பிறப்போடு கூடியதொன்றென்பதை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் உய்வையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்தும் கடப்பாடு அரசாங்கத்தினுடையதாகும்.

உறுப்புரை 7 – பெயரும் தேசியமும்

ஒவ்வொரு குழந்தையும் பிறந்ததும் ஒரு பெயரை பெரும் உரிமையுடையதாகும். இதனுடன் ஒரு நாட்டினத்தை சார்வதற்கும், தன் பெற்றோர் இன்னாரென்று அறிவதற்கும், அவர்களால் பராமரிக்கப்படுவதற்கும் உரிமையுடையதாகும்.

உறுப்புரை 8 -  தனித்துவத்ததை பேணல்

குழந்தையின் தனித்துவத்தை பேணுவதும், அவசியம் ஏற்படும் போது அதன் அடையாளத்தை மீள நிலைநாட்டுவதும் அரசின் கடமையாகும். (இதில் குழந்தையின் பெயர், இனம், குடும்ப சொந்தங்கள் என்பன அடங்கும்)

உறுப்புரை 9 – பெற்றோரைப் பிரிதல்

குழந்தைகள் அவர்களின் சிறந்த நலனை முன்னிட்டு அல்லாமல் (இம்சை, புறக்கணிப்பு) குழந்தையின் நலனுக்கு அவசியம் என்று கருதப்பட்டாலன்றி, தன் பெற்றாருடன் வாழும் உரிமை குழந்தைக்கு உண்டு. தாய் அல்லது தந்தையிடமிருந்து பிரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் இருவருடனும் உறவைப் பேணும் உரிமை குழந்தைக்க உண்டு.

உறுப்புரை 10 – பிரிந்த குடும்பம் இணைதல்

குடும்பத்தவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளும் பொருட்டோ, பெற்றோர் பிள்ளை உறவை பேணும் பொருட்டோ, வேறு ஒரு நாட்டை விட்டு வெளியேற தமது நாட்டினுள் நுழையும் உரிமை பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உண்டு;
உறுப்புரை 11 – சட்டவிரோத இடமாற்றமும் மீளாமையும்
பெற்றோரோ மூன்றாம் தரப்பினரோ சிறுவர்களை கடத்துதலை அல்லது தடுத்துவைத்தலை தடுப்பதும் நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும்.

உறுப்புரை 12 – சிறுவரின் கருத்து

தனது கருத்தை தெரிவிக்கும் சுதந்திரம் பிள்ளைக்கு உண்டு. பிள்ளையை பாதிக்கும் எந்த விடயத்திலும் அதன் கருத்தை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

உறுப்புரை 13 – கருத்துச் சுதந்திரம்

பிறரின் உரிமைகளை மீறினாலன்றி மற்றும்படி தனது எண்ணங்களை தங்குதடையின்றி வெளியிடவும், தகவல்களை பெறவும், தன் கருத்தை அல்லது தகவலை தெரியப்படுத்தவும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமையுண்டு.

உறுப்புரை 14 – சிந்தனை, மனசாட்சி, மத சுதந்திரம்

பெற்றோரின் முறையான வழிநடத்தலுக்கும் தேசிய சட்டத்துக்கும் அமைய, சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம், மதச் சுதந்திரம் போன்றவற்றுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமையுண்டு.

உறுப்புரை 15 - கூடும் சுதந்திரம்

பிறரின் உரிமைகளை மீறினாலன்றி மற்றும்படி பிறருடன் சேர்வதற்கும், சங்கங்களை அமைத்தல் அல்லது அவற்றில் அங்கம் பெறுவதற்கும் சிறுவருக்கு உரிமையுண்டு.

உறப்பரை 16 – அந்தரங்கங்களை காத்தல்

பிள்ளைகளுக்கு தனது அந்தரங்கங்களை பேணும் உரிமையுண்டு. தமது அந்தரங்கம், குடும்பம், வீடு, கடிதத் தொடர்பு ஆகியவற்றில் பிறர் தலையிடாதிருக்கும் உரிமை சிறுவர்களுக்குண்டு.

உறுப்புரை 17 – தகுந்த தகவல்கள் கிடைக்க வழிசெய்தல்

வெகுசன ஊடகங்களின் முக்கியத்தை அரசாங்கம் அங்கீகரித்தல் வேண்டும். அதனுடன் பிள்ளை உள்@ர் மற்றும் வெள்நாடுகளிலிருநது பல்வேறு தகவல்களையும் தகவற் சாதனங்களையும், குறிப்பாக அதன் சேம நலனை மேம்படுத்தும் சாதனங்களையும், பெறுவதற்கான வாய்ப்புக்களையும் அளித்தல் வேண்டும். இவ்விடயத்தில் பிள்ளையின் கலாசாரப் பின்னணிக்கு மதிப்பளித்தல் வேண்டும்.

உறுப்புரை 18 – பெற்றோர் பொறுப்பு

பிள்ளையை வளர்க்கும் முக்கிய பொறுப்பு தாய், தந்தை ஆகிய இருவரையும் சார்ந்ததாகும. ஆரசாங்கம் இது விடயத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதோடு பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு தகுந்த உதவிகளை வழங்குதல் வேண்டும்.
உறுப்புரை 19 - இம்சை, புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு;
சகல வகையான இம்சைகள், புறக்கணிப்பிலிருந்தும் பாதுகாப்பு பெரும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. அவர்களை துன்புறுத்த பெற்றோருக்கோ, பராமரிப்பாளர்களுக்கோ உரிமையில்லை. இது தொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அரசினுடையதாகும்.
உறுப்புரை 20 – குடும்பப் பிணைப்பற்ற பிள்ளையை பாதுகாத்தல்
குடுப்பச் சூழலற்று வாழும் பிள்ளை விசேட பாதுகாப்பு பெறும் உரிமை உடையதாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தகுந்த மாற்றுக் குடும்பப் பராமரிப்பினை வழங்குவதும் அல்லது பராமரிப்பு நிலையமொன்றில் இடம் தேடிக்கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும். இக் கடமையை நிறைவேற்றும் போது பிள்ளையின் கலாசாரப் பின்னணியினை  கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
உறுப்புரை 21 –சுவீகாரம்
பிள்ளையின் நலனை முன்னிட்டே மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதும் சட்டத்திற்கு அமைவாக அது நிறைவேற்றப்படல் வேண்டும்.

உறுப்புரை 22 – அகதிச் சிறுவர்கள்

ஒரு சிறுவன் அல்லது சிறுமி தனது சொந்த வீட்டிலோ, நாட்டிலோ வாழ்வது பாதுகாப்பற்றது என்பதால் அவ்விடத்தை விட்டு அகன்று அநாதையானால் விசேட பாதுகாப்பும் உதவியும் பெறும் உரிமை அச் சிறுவன் அல்லது சிறுமிக்கு உண்டு.
உறுப்பரை 23 – ஊனமுற்ற சிறுவர்கள்
உள மற்றும் உடல் ஊனமுற்ற பிள்ளைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கும் முடிந்தவரை சிறப்பான முறையில் தம் சொந்தக் காலில் நிற்கவும் சமுதாயத்துடன் இணைந்து கொள்ளவும் வாய்ப்புப் பெறும் பொருட்டு விசேட பராமரிப்பு, கல்வி, பயிற்சி என்பவற்றை பெறும் உரிமையுடையவர்களாவர்.
உறுப்புரை 24-சுகாதாரமும் சுகாதார சேவைகளும்
மிக உயர்ந்த தராதரமுடைய சுகாதாரத்தையும் பராமரிப்பையும் பெறும் உரிமை பிள்ளைகளுக்குண்டு. ஆரம்ப மற்றும் நோய் தடுப்பு பராமரிப்பு, பொதுச் சுகாதாரக் கல்வி, சிசு மரண விகிதாசாரத்தை குறைத்தல் ஆகிய சேவைகளை பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளித்தல் வேண்டும்.

உறுப்புரை 25 –தாபரிப்பிடத்தை அவ்வப்போது கண்காணித்தல்

பராமரிப்பு, பாதுகாப்பு அல்லது சிகிச்சைக்கென தாபரிப்பு இடமொன்றில் அரசாங்கத்தாற் கையளிக்கப்பட்ட பிள்ளை அவ்விடத்தில் முறையாக தாபரிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்கும் கடமை அரசாங்கத்திற்குரியதாகும்.

உறுப்புரை 26 -  சமூகப் பாதுகாப்பு

சகல சமூகப் பாதகாப்பு நடவடிக்கைகளிலும் உள்ள பயன்களை பெறும் உரிமை பிள்ளைகளுக்குண்டு.

உறுப்புரை 27 – வாழ்க்கைத்தரம்

ஒவ்வொரு பிள்ளையும் இசைவான வாழ்க்கைத் தரத்தைப் பெறும் உரிமை உடையதாகும். பிள்ளை தகுந்த வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதை உறுதிப்படுத்தும் தலையாய பொறுப்பு பெற்றோரைச் சாரும், இப் பொறுப்பை நிறைவேற்ற பெற்றோரால் முடியாத போது அவர்களுக்கு உதவுதல் அரசின் பொறுப்பாகும்.

உறுப்புரை 28 – கல்வி

கல்வி பயிலும் உரிமை எல்லாப் பிள்ளைகளுக்கும் உண்டு. பிள்ளையின் ஆரம்பக் கல்வியாவது கட்டாயமாகவும் இலவசமாகவும் கிடைப்பதை உறுதிப்படுத்தல் அரசின் கடமையாகும்.

உறுப்புரை 29 – கல்வியின் நோக்கம்

பிள்ளையின் ஆளுமை, திறமை, உடல் மற்றும் உள ஆற்றல்கள் ஆகியவற்றை முழுமையாக விருத்தி செய்வதே கல்வியின் நோக்கம். சுதந்திரமான சமுதாயத்தில் பொறுப்புடனும், அமைதியுடனும் வாழ்வதற்கும் அடிப்படை மனித உரிமைகள், தமது சொந்தக் கலாசார, ஆசாரங்களை மட்டுமல்லாமல் பிறரின் விழுமியங்களையும் கனம் பண்ணுவதற்கும் சிறுவர்களுக்கு கல்வி அவசியமாகும்.


உறுப்புரை 30 – சிறுபான்மை மக்களின் பிள்ளைகள்

தமது சொந்தக் கலாசாரத்தை அனுபவிக்கவும் தமது சொந்த மதம், மொழி ஆகியவற்றை பயிலவும் சிறுபான்மை இனத்தவர்களின் பிள்ளைகளுக்கு உரிமை உண்டு.

உறுப்புரை 31 – ஓய்வு, பொழுதுபோக்கு, கலாசார நடவடிக்கைகள்

பிள்ளைகள் ஓய்ந்திருக்கவும் விளையாட்டு, கலாசார, கலை நிகழ்ச்சிகளிற் பங்குபற்றவும் உரிமையுடையவர்களாவர்.
உறுப்புரை 32 – பால்ய ஊழியம்
ஆரோக்கியம், கல்வி அல்லது மேம்பாடு ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வேலைப் பளுவிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை பிள்ளைகளுக்குண்டு. தொழில் புரியும் குறைந்தபட்ச வயதெல்லையை நிர்ணயிப்பதும், வேலை நிபந்தனைகளை நெறிப்படுத்துவதும் அரசின் கடமையபகும்.

உறுப்புரை 33 – போதைப்பொருட் துஸ்பிரயோகம்

சட்டவிரோதமான மருந்துகளையும் வேறு போதைவஸ்துக்களையும் உபயோகிப்பதிலிருந்தும் அவற்றை தயாரித்தல் அல்லது விநியோகித்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படும் உரிமை சிறுவர்களுக் உண்டு.

உறுப்புரை 34 – பாலியல் இம்சை

விபச்சாரம் மற்றும் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படல் உட்பட, பாலியல் சார்ந்த சுரண்டல் அல்லது இம்சையிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை ஒவ்வொரு பிள்ளைக்கும் உண்டு.

உறுப்புரை 35 – விற்பனை, பரிவர்த்தனை, கடத்தல்

பிள்ளைகளை விற்பனை செய்தல், பரிவர்த்தனை செய்தல், கடத்திச் செல்லுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுதல் வேண்டும்.

உறுப்புரை 36 –ஏனைய இம்சைகள்

பிள்ளைகளின் சேம நலன் சார்ந்த உறுப்புரைகள் 32, 33, 34, 35 ஆகியவற்றிற் குறிப்பிடப்படாத மற்றெல்லா இம்சைகளிலிருந்தும் அரசாங்கம் பிள்ளைகளை பாதுகாத்தல் வேண்டும்.

உறுப்புரை 37 – சித்திரவதை, சுதந்திரத்தை மறுத்தல்

எந்தப் பிள்ளையும் சித்திரவதை, துன்பம், சட்டவிரோத கைது, அல்லது சுதந்திரத்தை மறுத்தல் ஆகியவற்றுக்கு ஆளாக்கப்படக் கூடாது. தகுந்த சிகிச்சை, தடுப்புக் காவலில் உள்ள பெரியவர்களிடமிருந்து பிரிந்திருத்தல், குடும்பத்தவர்களு;டன் தொடர்பு பேணல், சட்ட மற்றும் பிற  உதவி பெறும் வாய்ப்பு ஆகியன ஒவ்வொரு பிள்ளையினதும் உரிமையாகும்.

உறுப்புரை 38 – ஆயுதப் பிணக்குகள்

போர்க் காலங்களில் பாதுகாப்பு பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. 15 வயதிற்குட்பட்ட எந்தப் பிள்ளையும் சண்டைகளில் நேரடியாக பங்குகொள்ளவோ, ஆயுதப்படைகளிற் சேர்க்கப்படவோ கூடாது.

உறுப்புரை 39 – புணர்வாழ்வு பராமரிப்பு

ஆயுதமேந்திய சண்டைகள், சித்திரவதை, புறக்கணிப்பு, துன்புறுத்தல், சுரண்டல் ஆகியவற்றுக்கு இலக்கான பிள்ளைகள் குணமடைவதற்கான சிகிச்சை பெறுவதையும் சமுதாயத்தில் மீண்டும் இணைந்து கொள்வதையும் உறுதிப்படுத்துதல் அரசின் கடமையாகும்.

உறுப்புரை 40 – பால்ய நீதிபரிபாலணம்

பிள்ளைகள் குற்றம் இழைத்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டால் சட்ட மற்றும் ஏனைய உதவி பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு.

உறுப்புரை  - 41 நடைமுறையிலுள்ள நியமங்களை மதித்தல்

சிறுவர் உரிமைகள் தெர்டர்பான தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வரையப்பட்ட நியமங்கள் இச் சமவாயத்தில் உள்ளவற்றிலும் உயர்ந்தனவாக விளங்கும் பட்சத்தில் உயர்ந்த நியமமே என்றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

உறுப்புரை 42 – அமுலாக்கல்

இச் சமவாயத்திற் சொல்லப்பட்டுள்ள உரிமைகளை வயது வந்தோருக்கும் சிறுவர்களுக்கும் பரவலாக அறியச் செய்தல் அரசாங்கத்தின் கடமையாகும்.
 
இவற்றுடன் இச் சமவாயத்தின் ஏனைய உறுப்புரைகள் சமவாயத்தினை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஐந்தாண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கும் அரசாங்கத்தை சாறும் என கூறுவதுடன் சமவாயத்துக்கு தம்மை அர்ப்பணித்தல் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் விபரிக்கின்றன.

No comments:

Post a Comment