Monday, November 29, 2010

சிறுவர் உரிமைகள் சாசனத்தை நாடுகள் நடைமுறைப்படுத்தும் முறைகள்

சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையானது அரசுகள் தேசிய மட்டங்களில் பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அங்கீகரிப்பதற்குமான வழிமுறைகளை உருவாக்கியமை  குறிப்பிடத்தக்க விடயமாகும்.
     அவ்வகையில் இன்று குறைந்தது 22 நாடுகள் சிறுவர் உரிமைகளினைத் தமது அரசியலமைப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன. இவற்றில் பிறேசில், ஈக்வடோர், எதியோப்பியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் உள்ளடங்குகின்றமை முக்கிய அம்சமாகும்.
      இதனோடு 50 இற்கும் அதிகமான நாடுகள் இவ் உடன்படிக்கையின் ஏற்பாடுகளுடன் ஒத்தியல்பை உறுதிப்படுத்துவதற்கு சட்ட மீளாய்வு செயல்முறையொன்றினைக் கொண்டுள்ளன.

     பொலிவியா, பிறேசில், நிக்கரகுவா போன்ற நாடுகள் பிள்ளைகளினதும் வளரினம் பருவத்தினரினதும் உரிமைகள் தொடர்பான ஒழுக்கக் கோவையொன்று கைக்கொள்ளப்படுதலை ஊக்குவித்துள்ளன.
    இவற்றுடன் ஏனைய நாடுகள் சட்டவாக்க மாற்றங்கள் தேவைப்படுகின்ற பரப்புக்களில் மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான மாற்றங்களும் நாடுகளும் பின்வருமாறு:

சிறுவர் ஊழியம்                                         : இந்தியா, பாக்கிஸ்தான், போர்த்துக்கல்
பாலியல் சுரண்டலிலிருந்து பாதுகாப்பு    : அவுஸ்ரேலியா, பெல்ஜியம், ஜேர்மனி, சுவீடன்,தாய்லாந்து
இளம்பருவத்தினர் நீதி                                : பிறேசில், கொஸ்ராரிக்கா, எல்சல்வடோர்

நாடுகளுக்கிடையிலான சுவீகாரம்            : பராகுவே, ருமேனியா, ஐக்கிய இராச்சியம்

மேற்கூறியவற்றுடன் சில நாடுகள் குறித்த நடத்தையில் மாற்றங்களை ஊக்கவிப்பதற்கும், உடன்படிக்கையின் சரத்துக்களுடனும், ஏற்பாடுகளுடனும் ஒத்தியலாத பழக்கங்களை தடை செய்வதற்கும் முக்கியமான சட்டவாக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
உதாரணம் :
    பாடசாலைகளிலும், குடும்பத்திலும் பிள்ளைகளுக்கு உடல் சார்ந்த தண்டனையை தடை செய்தலினை ஆஸ்திரியா, சைப்பிரஸ், ஸ்கன்டினேவிய நாடுகள் போன்றன நடைமுறைப்படுத்தியுள்ளன.

சிறுவர் உரிமை சாசனத்தை பின்பற்றி உருவான உடன்படிக்கைகள்

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் சிறுவர் உரிமைகள் சாசனத்தினை பிரகடனப்படுத்தியதை அடுத்து வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடுகள் அனைத்திலும் சிறுவர் உரிமைகள் பற்றிய எண்ணக்கரு ஒரு முதன்மையான இடத்தினை பிடித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அவ்வகையில் அதனைப் பின்பற்றி பல உடன்படிக்கைகள் தோற்றம் பெறுவதற்கும் காரணமாகியது. அவ்வாறு உருவான உடன்படிக்கைகளாவன :

   “பிள்ளைகளின் பாதுகாப்பும், நாடுகளுக்கிடையிலான சுவீகாரம் தொடர்பில் ஒத்துழைப்பும் பற்றிய ஹேக் உடன்படிக்கை  போன்ற சர்வதேச சட்ட சாதனங்களின் உருவாக்கத்திற்கும் அடிப்படையாய் அமைந்தது.
    இதனுடன் “சிறுவர் ஊதியத்தின் மோசமான வடிவங்கள் பற்றிய புதிய ஐடுழு” உடன்படிக்கை சிறுவர் ஊழியம் தொடர்பான விளக்கங்களினை அளிப்பதாக அமைந்தது.
    “பிள்ளைகளின் உரிமைகளும் ஆக்க நலமும் பற்றிய ஆபிரிக்கப் பட்டயம்” போன்ற பல்வேறு பிராந்திய சாதனங்கள் இவ்வுடன்படிக்கையினை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையாகும்.
     இவற்றுடன் இவ் உடன்படிக்கையானது இராணுவ ஆட்சேர்ப்புக்கும், ஆயுத மோதல்களில் பங்கு பற்றுவதற்கான குறைந்த பட்ச வயதினை உயர்த்துவதற்கும், சர்வதேச ஒத்துழைப்பினூடாக பாலியல் சுரண்டலிலிருந்து பிள்ளைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குமான பின்னேடுகளை வகுப்பதற்குமான செயல்முறைகளுக்கு வழிவகுத்தது.
     இவ்வாறான உடன்படிக்கைகளின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுவர் உரிமைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்; உரிமைகள் பற்றிய சமவாயம் 1989ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சமவாயம் சர்வதேசவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக விளங்குவதுடன் எல்லாப் பிள்ளைகளுக்குமுரிய உரிமைகளை வரையறுத்துள்ளது. இதில் சிறுவர்கள் சிறப்பான மதிப்புக்குரியவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்குரிய நன்மைகள், அவர்கள் பெறவேண்டிய பாதுகாப்பு போன்றவற்றினை வரைமுறைப்படுத்துகிறது. இச்சமவாயம் 54 உறுப்புரைகளினைக் கொண்டுள்ளது. அதில் 42 உறுப்புரைகளின் சாரம்சம் பின்வறுமாறு:

உறுப்புரை 1 – சிறுவர் பற்றிய வரைவிலக்கணம்

18 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரும் சிறுவர், சிறுமியர் ஆகக் கணிக்கப்படுவர். இச் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா உரிமைகளையும் ஒவ்வொரு பிள்ளையும் அனுபவித்தல் வேண்டும்.

உறுப்புரை 2 – பாகுபாடு காட்டாமை

எல்லாப் பிள்ளைகளும் அவர்களின் வயது, பால், ஊனம், நிறம், சாதி, மொழி, அல்லது மதம் எவ்வாறிருப்பினும் இவ் உரிமைகள் எல்லாச் சிறுவர் சிறுமியருக்கும் உரியன. சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்தும் பாதுகாப்பதும், அவர்களின் உரிமைகளை பரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும்.

உறுப்புரை 3- சிறுவரின் சிறந்த நலன்கள்

சிறுவர்கள் தொடர்பான சகல செயற்பாடுகளும், முடிவுகளும் அவர்களின் சிறந்த நலன்களை கருத்தில் கொண்டமைதல் வேண்டும்.

உறுப்புரை 4 – சமவாயத்தை நடைமுறைப்படுத்தல்

சமவாயத்தில் அடங்கியுள்ள உரிமைகளை நிதர்சனமாக்குவதற்கு அரசாங்கம் தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

உறுப்புரை 5 – பெற்றோரின் வழிநடத்தலும் குழந்தையின் வளர்ச்சியும்

குழந்தை அதன் பரிணாம வளர்ச்சிக்கு இசைவான நெறிமுறைகளை புகட்டுவதில் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் உள்ள உரிமைகளையும் பொறுப்புக்களையும் அரசாங்கம் மதித்தல் வேண்டும்;.

உறுப்புரை 6 – உய்வும் மேம்பாடும்

ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழும் உரிமை பிறப்போடு கூடியதொன்றென்பதை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் உய்வையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்தும் கடப்பாடு அரசாங்கத்தினுடையதாகும்.

உறுப்புரை 7 – பெயரும் தேசியமும்

ஒவ்வொரு குழந்தையும் பிறந்ததும் ஒரு பெயரை பெரும் உரிமையுடையதாகும். இதனுடன் ஒரு நாட்டினத்தை சார்வதற்கும், தன் பெற்றோர் இன்னாரென்று அறிவதற்கும், அவர்களால் பராமரிக்கப்படுவதற்கும் உரிமையுடையதாகும்.

உறுப்புரை 8 -  தனித்துவத்ததை பேணல்

குழந்தையின் தனித்துவத்தை பேணுவதும், அவசியம் ஏற்படும் போது அதன் அடையாளத்தை மீள நிலைநாட்டுவதும் அரசின் கடமையாகும். (இதில் குழந்தையின் பெயர், இனம், குடும்ப சொந்தங்கள் என்பன அடங்கும்)

உறுப்புரை 9 – பெற்றோரைப் பிரிதல்

குழந்தைகள் அவர்களின் சிறந்த நலனை முன்னிட்டு அல்லாமல் (இம்சை, புறக்கணிப்பு) குழந்தையின் நலனுக்கு அவசியம் என்று கருதப்பட்டாலன்றி, தன் பெற்றாருடன் வாழும் உரிமை குழந்தைக்கு உண்டு. தாய் அல்லது தந்தையிடமிருந்து பிரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் இருவருடனும் உறவைப் பேணும் உரிமை குழந்தைக்க உண்டு.

உறுப்புரை 10 – பிரிந்த குடும்பம் இணைதல்

குடும்பத்தவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளும் பொருட்டோ, பெற்றோர் பிள்ளை உறவை பேணும் பொருட்டோ, வேறு ஒரு நாட்டை விட்டு வெளியேற தமது நாட்டினுள் நுழையும் உரிமை பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உண்டு;
உறுப்புரை 11 – சட்டவிரோத இடமாற்றமும் மீளாமையும்
பெற்றோரோ மூன்றாம் தரப்பினரோ சிறுவர்களை கடத்துதலை அல்லது தடுத்துவைத்தலை தடுப்பதும் நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும்.

உறுப்புரை 12 – சிறுவரின் கருத்து

தனது கருத்தை தெரிவிக்கும் சுதந்திரம் பிள்ளைக்கு உண்டு. பிள்ளையை பாதிக்கும் எந்த விடயத்திலும் அதன் கருத்தை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

உறுப்புரை 13 – கருத்துச் சுதந்திரம்

பிறரின் உரிமைகளை மீறினாலன்றி மற்றும்படி தனது எண்ணங்களை தங்குதடையின்றி வெளியிடவும், தகவல்களை பெறவும், தன் கருத்தை அல்லது தகவலை தெரியப்படுத்தவும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமையுண்டு.

உறுப்புரை 14 – சிந்தனை, மனசாட்சி, மத சுதந்திரம்

பெற்றோரின் முறையான வழிநடத்தலுக்கும் தேசிய சட்டத்துக்கும் அமைய, சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம், மதச் சுதந்திரம் போன்றவற்றுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமையுண்டு.

உறுப்புரை 15 - கூடும் சுதந்திரம்

பிறரின் உரிமைகளை மீறினாலன்றி மற்றும்படி பிறருடன் சேர்வதற்கும், சங்கங்களை அமைத்தல் அல்லது அவற்றில் அங்கம் பெறுவதற்கும் சிறுவருக்கு உரிமையுண்டு.

உறப்பரை 16 – அந்தரங்கங்களை காத்தல்

பிள்ளைகளுக்கு தனது அந்தரங்கங்களை பேணும் உரிமையுண்டு. தமது அந்தரங்கம், குடும்பம், வீடு, கடிதத் தொடர்பு ஆகியவற்றில் பிறர் தலையிடாதிருக்கும் உரிமை சிறுவர்களுக்குண்டு.

உறுப்புரை 17 – தகுந்த தகவல்கள் கிடைக்க வழிசெய்தல்

வெகுசன ஊடகங்களின் முக்கியத்தை அரசாங்கம் அங்கீகரித்தல் வேண்டும். அதனுடன் பிள்ளை உள்@ர் மற்றும் வெள்நாடுகளிலிருநது பல்வேறு தகவல்களையும் தகவற் சாதனங்களையும், குறிப்பாக அதன் சேம நலனை மேம்படுத்தும் சாதனங்களையும், பெறுவதற்கான வாய்ப்புக்களையும் அளித்தல் வேண்டும். இவ்விடயத்தில் பிள்ளையின் கலாசாரப் பின்னணிக்கு மதிப்பளித்தல் வேண்டும்.

உறுப்புரை 18 – பெற்றோர் பொறுப்பு

பிள்ளையை வளர்க்கும் முக்கிய பொறுப்பு தாய், தந்தை ஆகிய இருவரையும் சார்ந்ததாகும. ஆரசாங்கம் இது விடயத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதோடு பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு தகுந்த உதவிகளை வழங்குதல் வேண்டும்.
உறுப்புரை 19 - இம்சை, புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு;
சகல வகையான இம்சைகள், புறக்கணிப்பிலிருந்தும் பாதுகாப்பு பெரும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. அவர்களை துன்புறுத்த பெற்றோருக்கோ, பராமரிப்பாளர்களுக்கோ உரிமையில்லை. இது தொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அரசினுடையதாகும்.
உறுப்புரை 20 – குடும்பப் பிணைப்பற்ற பிள்ளையை பாதுகாத்தல்
குடுப்பச் சூழலற்று வாழும் பிள்ளை விசேட பாதுகாப்பு பெறும் உரிமை உடையதாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தகுந்த மாற்றுக் குடும்பப் பராமரிப்பினை வழங்குவதும் அல்லது பராமரிப்பு நிலையமொன்றில் இடம் தேடிக்கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும். இக் கடமையை நிறைவேற்றும் போது பிள்ளையின் கலாசாரப் பின்னணியினை  கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
உறுப்புரை 21 –சுவீகாரம்
பிள்ளையின் நலனை முன்னிட்டே மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதும் சட்டத்திற்கு அமைவாக அது நிறைவேற்றப்படல் வேண்டும்.

உறுப்புரை 22 – அகதிச் சிறுவர்கள்

ஒரு சிறுவன் அல்லது சிறுமி தனது சொந்த வீட்டிலோ, நாட்டிலோ வாழ்வது பாதுகாப்பற்றது என்பதால் அவ்விடத்தை விட்டு அகன்று அநாதையானால் விசேட பாதுகாப்பும் உதவியும் பெறும் உரிமை அச் சிறுவன் அல்லது சிறுமிக்கு உண்டு.
உறுப்பரை 23 – ஊனமுற்ற சிறுவர்கள்
உள மற்றும் உடல் ஊனமுற்ற பிள்ளைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கும் முடிந்தவரை சிறப்பான முறையில் தம் சொந்தக் காலில் நிற்கவும் சமுதாயத்துடன் இணைந்து கொள்ளவும் வாய்ப்புப் பெறும் பொருட்டு விசேட பராமரிப்பு, கல்வி, பயிற்சி என்பவற்றை பெறும் உரிமையுடையவர்களாவர்.
உறுப்புரை 24-சுகாதாரமும் சுகாதார சேவைகளும்
மிக உயர்ந்த தராதரமுடைய சுகாதாரத்தையும் பராமரிப்பையும் பெறும் உரிமை பிள்ளைகளுக்குண்டு. ஆரம்ப மற்றும் நோய் தடுப்பு பராமரிப்பு, பொதுச் சுகாதாரக் கல்வி, சிசு மரண விகிதாசாரத்தை குறைத்தல் ஆகிய சேவைகளை பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளித்தல் வேண்டும்.

உறுப்புரை 25 –தாபரிப்பிடத்தை அவ்வப்போது கண்காணித்தல்

பராமரிப்பு, பாதுகாப்பு அல்லது சிகிச்சைக்கென தாபரிப்பு இடமொன்றில் அரசாங்கத்தாற் கையளிக்கப்பட்ட பிள்ளை அவ்விடத்தில் முறையாக தாபரிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்கும் கடமை அரசாங்கத்திற்குரியதாகும்.

உறுப்புரை 26 -  சமூகப் பாதுகாப்பு

சகல சமூகப் பாதகாப்பு நடவடிக்கைகளிலும் உள்ள பயன்களை பெறும் உரிமை பிள்ளைகளுக்குண்டு.

உறுப்புரை 27 – வாழ்க்கைத்தரம்

ஒவ்வொரு பிள்ளையும் இசைவான வாழ்க்கைத் தரத்தைப் பெறும் உரிமை உடையதாகும். பிள்ளை தகுந்த வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதை உறுதிப்படுத்தும் தலையாய பொறுப்பு பெற்றோரைச் சாரும், இப் பொறுப்பை நிறைவேற்ற பெற்றோரால் முடியாத போது அவர்களுக்கு உதவுதல் அரசின் பொறுப்பாகும்.

உறுப்புரை 28 – கல்வி

கல்வி பயிலும் உரிமை எல்லாப் பிள்ளைகளுக்கும் உண்டு. பிள்ளையின் ஆரம்பக் கல்வியாவது கட்டாயமாகவும் இலவசமாகவும் கிடைப்பதை உறுதிப்படுத்தல் அரசின் கடமையாகும்.

உறுப்புரை 29 – கல்வியின் நோக்கம்

பிள்ளையின் ஆளுமை, திறமை, உடல் மற்றும் உள ஆற்றல்கள் ஆகியவற்றை முழுமையாக விருத்தி செய்வதே கல்வியின் நோக்கம். சுதந்திரமான சமுதாயத்தில் பொறுப்புடனும், அமைதியுடனும் வாழ்வதற்கும் அடிப்படை மனித உரிமைகள், தமது சொந்தக் கலாசார, ஆசாரங்களை மட்டுமல்லாமல் பிறரின் விழுமியங்களையும் கனம் பண்ணுவதற்கும் சிறுவர்களுக்கு கல்வி அவசியமாகும்.


உறுப்புரை 30 – சிறுபான்மை மக்களின் பிள்ளைகள்

தமது சொந்தக் கலாசாரத்தை அனுபவிக்கவும் தமது சொந்த மதம், மொழி ஆகியவற்றை பயிலவும் சிறுபான்மை இனத்தவர்களின் பிள்ளைகளுக்கு உரிமை உண்டு.

உறுப்புரை 31 – ஓய்வு, பொழுதுபோக்கு, கலாசார நடவடிக்கைகள்

பிள்ளைகள் ஓய்ந்திருக்கவும் விளையாட்டு, கலாசார, கலை நிகழ்ச்சிகளிற் பங்குபற்றவும் உரிமையுடையவர்களாவர்.
உறுப்புரை 32 – பால்ய ஊழியம்
ஆரோக்கியம், கல்வி அல்லது மேம்பாடு ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வேலைப் பளுவிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை பிள்ளைகளுக்குண்டு. தொழில் புரியும் குறைந்தபட்ச வயதெல்லையை நிர்ணயிப்பதும், வேலை நிபந்தனைகளை நெறிப்படுத்துவதும் அரசின் கடமையபகும்.

உறுப்புரை 33 – போதைப்பொருட் துஸ்பிரயோகம்

சட்டவிரோதமான மருந்துகளையும் வேறு போதைவஸ்துக்களையும் உபயோகிப்பதிலிருந்தும் அவற்றை தயாரித்தல் அல்லது விநியோகித்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படும் உரிமை சிறுவர்களுக் உண்டு.

உறுப்புரை 34 – பாலியல் இம்சை

விபச்சாரம் மற்றும் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படல் உட்பட, பாலியல் சார்ந்த சுரண்டல் அல்லது இம்சையிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை ஒவ்வொரு பிள்ளைக்கும் உண்டு.

உறுப்புரை 35 – விற்பனை, பரிவர்த்தனை, கடத்தல்

பிள்ளைகளை விற்பனை செய்தல், பரிவர்த்தனை செய்தல், கடத்திச் செல்லுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுதல் வேண்டும்.

உறுப்புரை 36 –ஏனைய இம்சைகள்

பிள்ளைகளின் சேம நலன் சார்ந்த உறுப்புரைகள் 32, 33, 34, 35 ஆகியவற்றிற் குறிப்பிடப்படாத மற்றெல்லா இம்சைகளிலிருந்தும் அரசாங்கம் பிள்ளைகளை பாதுகாத்தல் வேண்டும்.

உறுப்புரை 37 – சித்திரவதை, சுதந்திரத்தை மறுத்தல்

எந்தப் பிள்ளையும் சித்திரவதை, துன்பம், சட்டவிரோத கைது, அல்லது சுதந்திரத்தை மறுத்தல் ஆகியவற்றுக்கு ஆளாக்கப்படக் கூடாது. தகுந்த சிகிச்சை, தடுப்புக் காவலில் உள்ள பெரியவர்களிடமிருந்து பிரிந்திருத்தல், குடும்பத்தவர்களு;டன் தொடர்பு பேணல், சட்ட மற்றும் பிற  உதவி பெறும் வாய்ப்பு ஆகியன ஒவ்வொரு பிள்ளையினதும் உரிமையாகும்.

உறுப்புரை 38 – ஆயுதப் பிணக்குகள்

போர்க் காலங்களில் பாதுகாப்பு பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. 15 வயதிற்குட்பட்ட எந்தப் பிள்ளையும் சண்டைகளில் நேரடியாக பங்குகொள்ளவோ, ஆயுதப்படைகளிற் சேர்க்கப்படவோ கூடாது.

உறுப்புரை 39 – புணர்வாழ்வு பராமரிப்பு

ஆயுதமேந்திய சண்டைகள், சித்திரவதை, புறக்கணிப்பு, துன்புறுத்தல், சுரண்டல் ஆகியவற்றுக்கு இலக்கான பிள்ளைகள் குணமடைவதற்கான சிகிச்சை பெறுவதையும் சமுதாயத்தில் மீண்டும் இணைந்து கொள்வதையும் உறுதிப்படுத்துதல் அரசின் கடமையாகும்.

உறுப்புரை 40 – பால்ய நீதிபரிபாலணம்

பிள்ளைகள் குற்றம் இழைத்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டால் சட்ட மற்றும் ஏனைய உதவி பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு.

உறுப்புரை  - 41 நடைமுறையிலுள்ள நியமங்களை மதித்தல்

சிறுவர் உரிமைகள் தெர்டர்பான தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வரையப்பட்ட நியமங்கள் இச் சமவாயத்தில் உள்ளவற்றிலும் உயர்ந்தனவாக விளங்கும் பட்சத்தில் உயர்ந்த நியமமே என்றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

உறுப்புரை 42 – அமுலாக்கல்

இச் சமவாயத்திற் சொல்லப்பட்டுள்ள உரிமைகளை வயது வந்தோருக்கும் சிறுவர்களுக்கும் பரவலாக அறியச் செய்தல் அரசாங்கத்தின் கடமையாகும்.
 
இவற்றுடன் இச் சமவாயத்தின் ஏனைய உறுப்புரைகள் சமவாயத்தினை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஐந்தாண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கும் அரசாங்கத்தை சாறும் என கூறுவதுடன் சமவாயத்துக்கு தம்மை அர்ப்பணித்தல் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் விபரிக்கின்றன.

சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.

1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. . ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ‘மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக் குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.
இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக” (International Human Rights Day) கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்” என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும், செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.
இந் நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டுக்கான தொனிப்பொருள் “எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்’ (dignity and justice for all of us) என்பதாகும்.
1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், ‘எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்.” என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமை சாசனம்” 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.
மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 – 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு வரையானவை (22 – 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

மனித உரிமைகளின் சுருக்க வரலாறு.

மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட ‘நோக்கப் பிரகடனமும்,” கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட ‘அசோகனின் ஆணையும்”; கிபி 622 இல் முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘மதீனாவின் அரசியல் சட்டமும்” விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்” (Magna Carta Libertatum) முக்கியத்துவம் பெறுகின்றது.
மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட “கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்” (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்”, 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்”. 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட ‘ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்”, 1789ம்ஆண்டு பிரான்ஸியப் புரட்சியை அடுத்து ‘மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்” அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் “லீபர் நெறிகள்” 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.
முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் ‘சர்வதேச சங்கம்” உருவானது. இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது, என்பதைக் குறிக்கோலாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும், மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.

அனைத்துலக மனித உரிமை சாசனம்.

சர்வதேச மனித உரிமை சாசனம் 30 உறுப்புரைகளும் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
உறுப்புரை 1
சமத்துவ உரிமை – சகல மனிதர்களும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.
உறுப்புரை 2
ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன எத்தகைய வேறுபாடுகளுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் அனைவரும் உரித்துடையவராவர். அதாவது நிறத்தில், பாலினத்தில், மதத்தில், மொழியில் வேறுபாடு இருப்பினும் அனைவரும் சமமே!
உறுப்புரை 3
வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆளெவருக்குமான உரிமை. அதாவது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு
உறுப்புரை 4
அடிமை நிலை, அடிமை வியாபாரம் அவற்றில் எல்லா வகையிலும் விடுபடுவதற்கான சுதந்திரம். அதாவது உங்களை அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. அதேபோல ‘யாரையும் அடிமையாக நடத்த உங்களுக்கும் உரிமை இல்லை”.
உறுப்புரை 5
சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
உறுப்புரை 6
சட்டத்தின் முன் ஆளாக கணிக்கப்படுத்துவதற்கான உரிமை. அதாவது சட்டத்தால் சமமாக நடத்தபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு
உறுப்புரை 7
சட்டத்தின் முன் அனைவரும் சமன். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள்.
உறுப்புரை 8
ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகுதியான நியாய சபை முன் பரிகாரம் பெறுவதற்கான உரிமை. அதாவது ஒருவரது உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.
உறுப்புரை 9
சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. அதாவது நீதிக்கு புறம்பாக உங்களை காவலில் வைக்கவோ, உங்கள் தேசத்தில் இருந்து நாடு கடத்தவோ உரிமை இல்லை.
உறுப்புரை 10
நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை
உறுப்புரை 11
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப்படும் உரிமை. அவ்விளக்கத்தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.
2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறொன்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.
உறுப்புரை 12 .
அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு, அல்லது தொடர்பாடல்களில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். அனைவருக்கும் நமது அந்தரங்கத்தை காத்துக்கொள்ள உரிமை உண்டு.
உறுப்புரை 13
1. ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கான, நாட்டை விட்டு வெளியேற, திரும்பி வருவதற்கான உரிமை
உறுப்புரை 14
ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு
1. வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வழங்குவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும், நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.
உறுப்புரை 15
1. ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை உண்டு.
2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.
உறுப்புரை 16
விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ள குடும்ப பாதுகாப்பிற்கான உரிமை
1. பராய வயதையடைந்த ஆண்களும், பெண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும், ஒரு குடு்ம்பத்தை கட்டியெழுப்புவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் கலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.
3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.
உறுப்புரை 17
சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை
1. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.
உறுப்புரை 18
மதம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம்
சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயிலல், வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேரொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.
உறுப்புரை 19
கருத்து, தகவலிற்கான சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.
உறுப்புரை 20
எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள, சங்கத்தில் உறுபினராக உரிமை உண்டு
1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.
2. ஒரு சங்கத்தில் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.
உறுப்புரை 21
அரசியல் உரிமை – அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபற்றவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை
1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.
2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் எல்லையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பானது, குறித்த காலத்தில் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
உறுப்புரை 22
சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய உரிமை -
உறுப்புரை 23 தொழில் புரியவும், ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமை
1. ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.
2. ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.
3. வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.
4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.
உறுப்புரை 24
இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை -
இளைப்பாறுவதற்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான விடுமுறைகள் அடங்கும்.
உறுப்புரை 25
நல்ல வாழ்க்கை தரத்திற்கான உரிமை
1. ஒவ்வொருவரும் உணவு, உடை, உரையுள், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிற் பிறந்தவையாயினுஞ்சரி அத்தகைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் அனுபவிக்கும் உரிமையுடையன.
உறுப்புரை -26
கல்விக்கான உரிமை
1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.
2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும்.
உறுப்புரை 27
தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அறிவியல் வளர்சியை பகிர்ந்து கொள்ளும்
உரிமை -
1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தா என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.
உறுப்புரை 28
மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக முறைமையில் பங்குபற்றும் உரிமை
இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட்டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.
உறுப்புரை 29
ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
1. எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.
உறுப்புரை 30
இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் நீக்கும் உரிமை கிடையாது
இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.