Monday, November 29, 2010

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமை சாசனம்” 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.
மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 – 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு வரையானவை (22 – 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

No comments:

Post a Comment